355 உள்கட்டமைப்பு திட்டங்களால் ரூ.3¾ லட்சம் கோடி கூடுதல் செலவு - நாடாளுமன்றத்தில் தகவல்

355 உள்கட்டமைப்பு திட்டங்களால் ரூ.3¾ லட்சம் கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-04 21:29 GMT

நாடு முழுவதும் 355 உள்கட்டமைப்பு திட்டங்கள், மொத்தம் ரூ.3 லட்சத்து 88 ஆயிரம் கோடி கூடுதல் செலவை ஏற்படுத்தி இருப்பதாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய மந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்தார்.

நிலத்தின் விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை, திட்ட செலவை குறைத்து மதிப்பிடுதல் உள்ளிட்டவை கூடுதல் செலவு ஏற்பட காரணங்கள் என்று அவர் கூறினார்.

‘‘பாதாள சாக்கடை திட்டம் 2 ஆண்டு தாமதம்’’

‘அம்ருத்‘ திட்டத்தின்கீழ், நாட்டில் 69 சதவீத நகர்ப்புறங்களில் 2020–ம் ஆண்டுக்குள் பாதாள சாக்கடை வசதிகளை நிறைவேற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், 2022-ம் ஆண்டுதான் இப்பணிகள் முடிவடையும் என்று மத்திய நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி மாநிலங்களவையில் தெரிவித்தார்.

‘‘ரெயில்வே ஊழியர்கள் சம்பளத்தால் ரூ.22 ஆயிரம் கோடி கூடுதல் செலவு’’

7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரையை அமல்படுத்தியதால், ரெயில்வே ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் என்ற வகையில் ரெயில்வேக்கு ரூ.22 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. மக்களவையில் கேள்வி நேரத்தில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் இதை தெரிவித்தார்.

புதிய ரெயில் பாதை அமைப்பது, லாபம் தராத பாதைகளில் ரெயில்களை இயக்குவது, புறநகர் ரெயில்கள் இயக்கம், தூய்மை பணி, அகல பாதை பணி ஆகியவற்றாலும் ரெயில்வேக்கு நஷ்டம் ஏற்படுவதாக அவர் கூறினார்.

‘‘தகவல் ஆணையத்தில் நிலுவையில் 33,487 புகார்கள்’’


மத்திய தகவல் ஆணையத்தில் 33 ஆயிரத்து 487 புகார்கள் மற்றும் மேல்முறையீடுகள் நிலுவையில் இருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்தார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய இணையதளம் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்