இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொலை - தாக்குதல் நடத்திய சக வீரரும் பலி

சத்தீஷ்கார் மாநிலத்தில் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய சக வீரரும் பலியானார்.

Update: 2019-12-04 06:28 GMT
ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த நாராயண்பூர் மாவட்டம், கடினர் கிராமத்தில் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையின் 45-வது படைப்பிரிவினரின் முகாம் உள்ளது. இது ராய்ப்பூரில் இருந்து சுமார் 350 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த முகாமில் நேற்று காலை 8.30 மணிக்கு ஒரு வீரர், தனது துப்பாக்கியால் சக வீரர்களை சரமாரியாக சுடத்தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது. துப்பாக்கி குண்டு பாய்ந்து, வீரர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் படையினர் அங்கு விரைந்தனர்.

படுகாயம் அடைந்த வீரர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூரில் உளள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஞ்சிய 2 வீரர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டை வெறித்தனமாக நடத்திய வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் இந்திய- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து பஸ்தார் சரக போலீஸ் ஐ.ஜி. பி.சுந்தர்ராஜ் விளக்கினார். அவர் கூறியதாவது:-

இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முகாமில் துப்பாக்கிச்சூடு நடத்திய வீரர் மசூதுல் ரகுமான் என தெரிய வந்துள்ளது. அவர் பணியின் நிமித்தமாக தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால்தான் சுட்டுள்ளார். இதில் 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் படுகாயம் அடைந்த 3 வீரர்களில் ஒரு வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மசூதுல் ரகுமானும் பலியாகி விட்டார். அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சக வீரர்களால் சுடப்பட்டு பலியானாரா என்பது இன்னும் தெளிவாக வில்லை. கொல்லப்பட்ட வீரர்களின் துப்பாக்கிகளை பரிசோதனை செய்துதான் அவர்கள் தங்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய வீரருக்கு பதிலடி கொடுத்தனரா என்பது தெரிய வரும்.

சக வீரர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் இந்த தாக்குதலை மசூதுல் ரகுமான் நடத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

பலியான வீரர்கள் மகேந்திர சிங், டல்ஜித் சிங், சுர்ஜித் சர்கார், விஸ்வரூப் மகதோ, பிஜேஸ் ஆவார்கள். படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகிற வீரர்கள் எஸ்.பி. உல்லாஸ், சீதாராம் டூன் ஆவர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்