'புல் புல்' புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களுக்கு ரூ.966.90 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு
'புல் புல்' புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களுக்கு ரூ.966.90 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
புதுடெல்லி,
கடந்த மாதம் வங்க கடலில் உருவான 'புல் புல்' புயல் தீவிர புயலாக வலுவடைந்து ஒடிசாவின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. மேற்கு வங்காளத்தில் 'புல் புல்' புயலால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன.
ஒடிசாவில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் பெருமளவில் சேதமடைந்தன. மேலும் அறுவடைக்கு காத்திருந்த கோதுமை பயிர்கள் அதிகளவில் நீரில் மூழ்கி வீணாயின.
இந்தநிலையில், 'புல் புல்' புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களுக்கு ரூ.966.90 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்கு வங்காள மாநிலத்திற்கு ரூ.414.90 கோடியும், ஒடிசா மாநிலத்திற்கு ரூ.552 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.