கேரளாவில் ஹெல்மெட் கட்டாயம்: அபராத முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சிவசேனா கட்சி தலைவர் வலியுறுத்தல்

கேரளாவில் ஹெல்மெட்டுக்கான அபராத முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்மாநில சிவசேனா கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-12-03 07:21 GMT
திருவனந்தபுரம்,

மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேரள அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் பயணிப்போரிடம்  ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஹெல்மெட் அணியாமல் பயணிப்போரிடம் ரூ.500 முதல் ரூ.1000  வரை அபராதம் விதிக்கப்படும் என கேரள அரசு கூறியதை கண்டித்து தலைமைச்செயலகம் அருகே கேரள மாநில சிவசேனா கட்சி தலைவர் பெரிங்கமலா அஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நடுத்தர வர்க்க மக்களும் இரு சக்கர வாகனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். நீதிமன்றம் மற்றும் மாநில அரசும்,  லட்சக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டை கட்டாயமாக்கும்போது, அவர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் அவர்களுக்கு ரூ .500 - ரூ.1000 அபராதம் விதிக்கப்படுவது இது அவர்களுக்கு ஒரு சுமையாக இருக்கும். அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்