சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
சபரிமலை,
கார்த்திகை மாதம் நாளை பிறப்பதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரிக்கு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து சன்னதிக்குள் அழைத்து சென்றார்.
அதேபோல, மாளிகைபுரம் மேல்சாந்தியாக எம்.எஸ்.பரமேஸ்வரன் நம்பூதரி பொறுப்பு ஏற்றார். அதன்பின் சபரிமலையில் புனிதமாகக் கருதப்படும் 18 படிகளுக்கு படிபூஜை நடத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.
கார்த்திகை முதல் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி ஏ.கே.சுதிர் நம்பூதிரி அய்யப்பன் கோவிலில் முறைப்படி பூஜைகள் செய்து மண்டல பூஜையைத் தொடங்கி வைப்பார்.
காலை கார்த்திகை முதல் தேதியில் இருந்து 41 நாட்களுக்கும் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். மண்டல பூஜை டிச.27-ம் தேதி நடைபெறும்.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லும் வழக்கில் தீர்ப்பையடுத்து குழப்பமான நிலை நிலவுகிறது. சபரிமலை சீசனையொட்டி, ஐயப்பன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கேரள அரசு செய்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதையொட்டி அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்கதர்கள் சரணகோஷத்துடன் அய்யப்பனை தரிசனம் செய்தனர்.