தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகத்தின் அணை திட்டத்துக்கு தடை கேட்ட தமிழக அரசின் மனு தள்ளுபடி

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசை அணுக உத்தரவிட்டது.

Update: 2019-11-14 20:30 GMT
புதுடெல்லி, 

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசை அணுக உத்தரவிட்டது.

அணை கட்டும் முயற்சி

கர்நாடக மாநிலம் சென்னகேசவ மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக 432 கி.மீ. தூரம் பயணித்து கடலூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.

இந்த ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக-தமிழக எல்லையில் 50 மீட்டர் உயரத்திற்கு அணை கட்டும் முயற்சியில் கர்நாடகம் இறங்கியது. இதற்கான ஆய்வு பணிகளை அந்த மாநில அரசு மேற்கொண்டது.

குடிநீர் பஞ்சம் ஏற்படும்

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, கர்நாடகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘தென்பெண்ணையாறு தமிழகத்திலும் பாய்வதால் அதற்கு கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது. தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தென்பெண்ணை ஆற்றில் கட்டுமானப் பணிகள், ஆய்வுப்பணிகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது’ என கூறப்பட்டு இருந்தது.

மேலும் கர்நாடகத்தின் இந்த திட்டத்துக்கு தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்த தமிழக அரசு, குடிநீர் தேவைக்காக மட்டும் தடுப்பணை கட்ட அனுமதி பெற்று, ஆற்றின் மொத்த நீரோட்டத்தையும் கர்நாடகம் திசை மாற்ற முயற்சிக்கிறது என்றும் அந்த மனுவில் கூறியிருந்தது.

இந்த கட்டுமானத்தால், தமிழகத்தில் தென்பெண்ணை ஆற்று நீரை நம்பியுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்படும் எனவும், இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவித்து இருந்தது. எனவே இந்த விவகாரத்தில் தீர்வுகாண நடுவர் மன்றம் அமைக்கவும் கோரிக்கை விடுத்தது.

முகாந்திரம் இல்லை

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் யு.யு.லலித், வினித் சரண் அமர்வில் நடைபெற்று வந்தது. தமிழக அரசு தரப்பில் வக்கீல் ஜி.உமாபதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் யு.யு.லலித், வினித் சரண் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அவர்கள் தங்கள் தீர்ப்பில், ‘தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே, கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்கு தடை விதிக்குமாறு கோரும் தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறினர்.

மூல வழக்கு ஒத்திவைப்பு

அதே நேரத்தில், ‘மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டு தாவா சட்டம் 1956-ல் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தை அமைக்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு 4 வாரங்களுக்குள் கோரிக்கை மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

பின்னர், தென்பெண்ணையாற்றில் இருந்து தமிழகத்துக்கு, கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரின் பங்கு குறித்த மூல வழக்கு வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும் செய்திகள்