கர்தார்பூர் ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக வாய்ப்பு - பாகிஸ்தான்
கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்,
சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தன் வாழ்நாளில் 18 ஆண்டுகளை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்துள்ளார். அதன் நினைவாக கர்தார்பூரில் ராவி நதிக்கரையோரம் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
அங்கு சென்று வரும் சீக்கியர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்காக பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இந்தியாவில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கர்தார்பூர் வழித்தடத் திட்டம் இந்தியா-பாகிஸ்தான் அரசாங்கங்களால் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம் வரும் நவம்பர் 12-ல் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சீக்கிய யாத்ரீகர்கள் ஓராண்டுக்கு கர்தார்பூர் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். கர்தார்பூர் குருத்வாராவுக்கு இந்தியாவைச் சேர்ந்த யாத்ரீகர்களும், வெளிநாடு வாழ் இந்தியக் குடியுரிமை அட்டை வைத்திருப்பவர்களும் கர்தார்பூருக்கு யாத்திரை செல்ல வசதியாக இச்சாலைத் திறப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த வழித்தடம் நவம்பர் மாதத் தொடக்கத்தில் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்தார்பூர் வழித்தடத் திட்டத்துக்கான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.