கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜராக பேராயருக்கு சம்மன்
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் நவம்பர் 11ல் ஆஜராகும்படி பேராயர் பிராங்கோ மூலக்கலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
கோட்டயம்,
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயராக இருந்த பிராங்கோ மூலக்கல், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என கன்னியாஸ்திரி ஒருவர் புகார் தெரிவித்தார். 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 13 தடவை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசிடம் புகார் அளித்தார். இதனைதொடர்ந்து பிராங்கோ மூலக்கல் மீது தேவாலய நிர்வாகமும், போலீசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அதனை கண்டித்து கன்னியாஸ்திரிகள் 75 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின்பு கடந்த வருடம் செப்டம்பரில் கேரளாவின் கொச்சி நகரில் வைத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் பிராங்கோ கோட்டயம் மாவட்டம் பலா கிளை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார்.
இதனிடையே, கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் நவம்பர் 11ல் ஆஜராகும்படி பிராங்கோ மூலக்கலுக்கு நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பி உள்ளது.