பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு நாளை ஊதியம் வழங்கப்படும் - நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு நாளை ஊதியம் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

Update: 2019-10-21 22:00 GMT
புதுடெல்லி,

பொதுத்துறை தொலைபேசி நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. ரூ.1,200 கோடி சம்பள பாக்கி வைத்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பள பாக்கி நாளை (புதன்கிழமை) வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.கே.புர்வார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுவாக, தொலைத்தொடர்பு துறை, சவாலான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. கட்டண போட்டி காரணமாக, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பொருளாதாரரீதியாக சவாலை சந்தித்து வருகின்றன.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு புத்துயிரூட்டும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படும்.

சந்தையில் இப்போதும் பி.எஸ்.என்.எல்.தான் முன்னணி நிறுவனம். ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது. மாதந்தோறும் ரூ.1,600 கோடி வசூல் ஆகிறது. அதில், மின் கட்டணம், பராமரிப்பு செலவு உள்ளிட்ட இதர செலவுகளுக்கு ரூ.400 கோடி முதல் ரூ.500 கோடி வரை செலவாகிறது. எனவே, ஊழியர்கள் ஒவ்வொருவரின் சம்பளமும் தீபாவளிக்கு முன்பாகவே வழங்கப்பட்டு விடும். அதாவது, 23 மற்றும் 24-ந் தேதிகளில் வழங்கப்படும். 4ஜி சேவை வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். இந்த ஆண்டுக்குள் அனுமதி கிடைத்து விடும் என்று கருதுகிறோம். நாடு முழுவதும் முழுஅளவில் 4ஜி சேவை அளிக்க 12 முதல் 15 மாதங்கள் ஆகிவிடும்.

இப்போதே 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பயன்படுத்தி, 4ஜி சேவையை வழங்கி வருகிறோம். 3ஜி சேவையில், வேகமான அகண்ட அலைவரிசையை கொண்டது, பி.எஸ்.என்.எல். ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்