ஐ.ஜி.முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஐ.ஜி.முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-10-14 21:30 GMT
புதுடெல்லி,

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றிய டாக்டர் எஸ்.முருகன், பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக கடந்த ஆண்டு பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அந்த வழக்கு விசாரணையை தெலுங்கானா மாநிலத்துக்கு சென்னை ஐகோர்ட்டு மாற்றி உத்தரவிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான அமர்வில் நடந்து வருகிறது.

கடந்த மாதம் 24-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கை தெலுங்கானா ஐகோர்ட்டுக்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், பாலியல் புகார் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு பெண் போலீஸ் அதிகாரிக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அப்போது தமிழக அரசு தரப்பில் இந்த வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றியதை ரத்து செய்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதற்கு நீதிபதிகள், பெண் போலீஸ் சூப்பிரண்டு தன்னுடைய பதில் மனுவை தாக்கல் செய்த பிறகு பார்க்கலாம் என்று கூறி வழக்கை இரு வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்