சிலையை பார்வையிட்ட தேவே கவுடாவுக்கு மோடி பாராட்டு

சிலையை பார்வையிட்ட தேவே கவுடாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2019-10-06 21:45 GMT
புதுடெல்லி,

நாடு சுதந்திரம் அடைந்தபோது பிரிந்து கிடந்த 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய சர்தார் வல்லபாய் படேலுக்கு சிறப்பு செய்யும் வகையில், குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணை எதிரே 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் அவரது முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படுகிற இந்த சிலையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி, படேலின் 143-வது பிறந்த நாளில் திறந்து வைத்தார். இந்த சிலைதான் உலகிலேயே உயரமான சிலை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த சிலை சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வருகிறது. உலகின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவே கவுடா, குஜராத் சென்று இந்த சிலையை பார்வையிட்டார். இதை படங்களுடன் அவர் டுவிட்டரில் பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “முன்னாள் பிரதமர் தேவே கவுடா, ஒற்றுமையின் சிலைக்கு வருகை தந்து பார்வையிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்