இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடைகள் ஏழுமலையான் கோவிலில் ஒப்படைப்பு

இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடைகள் ஏழுமலையான் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.;

Update: 2019-10-04 22:01 GMT
திருமலை,

திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு படைக்கப்படும் அஷ்ட மங்கல பொருட்களில் திருக்குடையும் ஒன்று. ஆதிசேஷனின் அம்சமே திருக்குடைகள். உணவு உற்பத்திக்குத் தேவையான மழையை, போதிய அளவுக்கு தரும்படி இறைவனிடம் வேண்டி, வேங்கடமுடையானுக்கு வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக வழங்கும் சம்பிரதாயம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து வருகிறது. இந்து தர்மார்த்த சமிதி சார்பில், புதிய வெண்பட்டுக்குடைகள் ஆண்டுதோறும் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக எடுத்து சென்று பிரம்மோற்சவத்தின்போது திருமலை கோவிலில் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, கடந்த மாதம் 28-ந்தேதி சென்னை, சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருக்குடை ஊர்வலம் புறப்பட்டது.

சென்னையில் இருந்து திருப்பதி வரைக்கும் வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள் திருக்குடைகளுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர். 5 நாள் பயணத்துக்குப்பின் திருக்குடைகள், திருப்பதி சென்றது. திருச்சானுர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கோவில் கண்காணிப்பாளர் வாசுவிடம் இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி திருக்குடைகளை சமர்ப்பித்தார். திருமலை மாடவீதிகளில், 9 வெண்பட்டுத்திருக்குடைகள், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வேங்கடமுடையான் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்