விபத்தில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி குடும்பத்துக்கு ரூ.96 லட்சம் இழப்பீடு

விபத்தில் உயிரிழந்த போலீஸ் அதிகாரி குடும்பத்துக்கு ரூ.96 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

Update: 2019-10-04 21:02 GMT
புதுடெல்லி,

டெல்லியில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மாம்சந்த் தோமர் (வயது 46) என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த விபத்து ஒன்றில் உயிரிழந்தார். டெல்லியில் இருந்து காசியாபாத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த வாகனம் ஒன்று இவரது காரில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது.

தோமரின் மரணத்துக்கு இழப்பீடு கேட்டு அவரது குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய தலைவர் மல்கோத்ரா, தோமர் குடும்பத்துக்கு ரூ.96.16 லட்சம் இழப்பீடாக வழங்குமாறு விபத்தை ஏற்படுத்திய வாகன உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

காரில் சென்ற தோமர் மீது எந்த தவறும் இல்லை எனவும், எதிரே வந்த வாகனம்தான் அதிக வேகமாகவும், கவனக்குறைவாகவும் வந்ததாக கூறிய தீர்ப்பாய தலைவர், எனவே இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு (தோமர் குடும்பம்) ஆதரவாக தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் கூறினார். போலீஸ் அதிகாரி மாம்சந்த் தோமருக்கு மனைவியும், 5 குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்