நாட்டில் நடப்பவற்றை பார்த்தால் காந்தியின் ஆன்மா வேதனைப்படும் - சோனியா காந்தி

இந்தியாவில் சில ஆண்டுகளாக நடப்பவற்றை பார்த்தால் காந்தியின் ஆன்மா வேதனைப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Update: 2019-10-02 12:00 GMT
புதுடெல்லி,

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்காட் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பேரணி நடைபெற்றது.

ராஜ்காட் பகுதியில் கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் காந்தியின் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் கடைபிடித்து வாழ்வோம் என்று சோனியா காந்தி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர். அதன்பின் அவர்களிடையே சோனியா காந்தி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, “இந்தியாவில் சில ஆண்டுகளாக நடப்பவற்றை பார்த்தால் காந்தியின் ஆன்மா வேதனைப்படும். இந்தியா, காந்தியுடனும் அவரது கொள்கைகளுடனும் ஒருங்கிணைந்துள்ளது. மகாத்மா காந்தியால் தான் இந்தியா இன்றைய நிலைக்கு வந்துள்ளது. ஆனால், சிலர் இந்தியாவுடன் ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.

தங்களை மிகவும் உயர்வானவர்கள் என்று கருதிக்கொள்பவர்கள் மகாத்மா காந்தியின் தியாகங்களை எப்படி புரிந்து கொள்வார்கள்? பொய்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்பவர்களுக்கு காந்தியின் அகிம்சை தத்துவம் புரியாது” என்று கூறினார்.

அதன்பின் பேசிய பிரியங்கா காந்தி, “உண்மை மற்றும் நேர்மையின் பாதையை பின்பற்ற வேண்டும் என்பது நமது தேசப்பிதாவின் கட்டளையாகும். பா.ஜ.க கட்சியினர் முதலில் உண்மையின் பாதையை பின்பற்ற வேண்டும். அதன் பின்னர் காந்தியின் கொள்கைகள் பற்றி அவர்கள் பேச வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்