கே.பி.சி. நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்றவர் தேர்தல் விழிப்புணர்வு தூதராக நியமனம்
கே.பி.சி. நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்ற சத்துணவு ஊழியர் மகாராஷ்டிராவில் தேர்தல் விழிப்புணர்வு தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அம்ராவதி,
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் வருகிற 21ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரம் செய்வது உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிர முனைப்புடன் இறங்கி உள்ளன.
இந்த தேர்தலில், முதன்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் தங்களது வாக்குகளை செலுத்தும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு தொடக்க முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
இதற்கு இடையே, ஓட்டளிப்பதன் அவசியம் பற்றி வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த மகாராஷ்டிர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக பபிதா தடே என்பவரை தேர்தல் விழிப்புணர்வு தூதராக நியமித்துள்ளது.
மகாராஷ்டிராவின் அம்ராவதி நகரில் அஞ்ஜன்காவன் சுர்ஜி என்ற கிராமத்தில் வசித்து வரும் இவர் அங்குள்ள அரசு பள்ளி கூடமொன்றில் சத்துணவு கூடத்தில் சமையல் செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம், தொலைக்காட்சியில் நடத்தப்படும் கோன் பனேகா குரோர்பதி என்ற வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.1 கோடி பரிசு வென்றுள்ளார்.
தேர்தல் பிரசார தூதராக நியமனம் செய்யப்பட்டது பற்றி தடே கூறும்பொழுது, ஓட்டளிக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். அது நம்முடைய தேசிய கடமை.
கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை இணைக்க நான் முயற்சி செய்வேன். தங்களது ஜனநாயக உரிமையை நிறைவேற்ற அவர்களை நான் வலியுறுத்துவேன் என்று கூறியுள்ளார்.