'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தால் ஒரு வருடத்தில் 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்- பிரதமர் மோடி

'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தால் ஒரு வருடத்தில் 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2019-10-01 14:28 GMT
புதுடெல்லி,

‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை அடுத்து தேசிய சுகாதார ஆணையத்தின் சார்பாக ‘ஆரோக்கிய மந்தன்’ என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை மக்களின் வெற்றியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “நாடு முழுவதும் உள்ள 46 லட்சம் ஏழை குடும்பங்கள் நோய்களில் இருந்து விடுபடவும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் இந்த திட்டம் உதவி செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 50 ஆயிரம் பேர் பலன் பெற்றுள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் மருத்துவ செலவிற்காக யாரும் நிலத்தையோ, நகைகளையோ விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. இதுவே இத்திட்டத்தின் வெற்றியாகும்.

உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை நாம் வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறோம். இந்த வெற்றிக்கு இந்தியாவின் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் அர்ப்பணிப்பு தான் காரணம்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்