25 ஆண்டுகளுக்குப்பின் அதிகம் பெய்த தென்மேற்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியாவில் 25 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக தென்மேற்கு பருவமழை அதிக அளவு பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2019-09-30 22:57 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம் ஆகும். இந்த ஆண்டு சுமார் ஒரு வாரம் தாமதமாக அதாவது ஜூன் 8-ந்தேதி கேரளாவில் தொடங்கியது. அந்த மாதத்தில் மிதமான மழையே இருந்தது. குறிப்பாக 33 சதவீத பற்றாக்குறையே அந்த மாதத்தில் காணப்பட்டது.

ஆனால் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பருவமழை அதிக அளவில் பெய்தது. இந்த மாதங்களில் முறையே 33 மற்றும் 15 சதவீதம் அதிக அளவு மழை பதிவானது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதமும் (செப்டம்பர்) அதிக அளவில் மழை பெய்தது. நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ததால் மக்களும் பெருமளவில் பயனடைந்தனர்.

இந்த தென்மேற்கு பருவ காலத்தில் ஒட்டுமொத்தமாக அதிக அளவு மழை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளில் அதாவது கடந்த 1994-ம் ஆண்டுக்குப்பின் முதல் முறையாக அதிக அளவு மழை பதிவாகி இருப்பதாக அந்த மையம் தெரிவித்து உள்ளது. இந்த மழையை ‘இயல்பு நிலைக்கு மேல்’ என வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்தி உள்ளது.

தென்மேற்கு பருவமழையின் அதிகாரப்பூர்வ காலம் நேற்றுடன் முடிவடைந்தது. ஆனாலும் நாட்டின் பல பகுதிகளில் இன்னும் மழை நீடிக்கிறது. எனவே மிக நீண்ட நாட்கள் தாமதமாக நிறைவடைந்த பருவமழை என்னும் சாதனையை இந்த பருவகாலம் பெற முடியும் என வானிலை மைய அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டு உள்ளனர்.

இதற்கிடையே பீகாரில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தலைநகர் பாட்னா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்கு மழை தொடர்பான சம்பவங்களுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 28 ஆக உயர்ந்தது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில அதிகாரிகள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விமானப்படை ஹெலிகாப்டர்களும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்