மறைந்த சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அவரது மகள்!
மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அவரின் மகள் பன்சூரி, வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயை அழைத்து ஒரு ரூபாய் ஊதியத்தை வழங்கினார்.
புதுடெல்லி,
முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம்தேதி உடல்நலக்குறைவாலும், திடீர் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்தார். சுஷ்மா சுவராஜ் இறப்பதற்கு சில மணிநேரத்துக்கு முன் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயுடன் தொலைப்பேசியில் பேசினார்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவ்விவகாரத்தை இந்தியா சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. விசாரணை முடிவில் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் ரத்து செய்தது. சிறையில் இருக்கும் ஜாதவுக்காக வாதாடிய ஹரிஷ் சால்வே தனக்கு சம்பளமாக வெறும் 1 ரூபாய் மட்டும் அடையாள தொகையாக கோரியிருந்தார்.
ஹரிஷ் சால்வேயிடம் தொலைபேசியில் பேசிய சுஷ்மா சுவராஜ் தன்னிடம் ஒரு ரூபாய் ஊதியத்தை பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்த சில மணிநேரத்தில் சுஷ்மா சுவராஜ் இந்த உலகை விட்டுச் சென்றார். தன்னை மறுநாள் மாலை 6 மணிக்கு வந்து 1 ரூபாய் ஊதியத்தை பெற்றுக்கொள்ளுமாறு சுஷ்மா சுவராஜ் கூறியிருந்ததாகவும், தன்னால் அதை பெற முடியவில்லை என்றும் ஹரிஷ் சால்வே ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயை நேற்று அழைத்த சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி அவரிடம் தனது தாயின் கடைசி ஆசையான ஒரு ரூபாய் ஊதியத்தை வழங்கினார்.
இதுகுறித்து ஹரிஷ் சால்வே நிருபர்களிடம் கூறுகையில், "குல்பூஷண் ஜாதவ் வழக்கில் நான் வென்றுவிட்டால், எனக்கு விலைமதிக்க முடியாத வகையில் ஒரு ரூபாய் ஊதியம் தருவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். ஆனால், அவரிடம் பெறமுடியவில்லை. இப்போது அவரின் மகளிடம் பெறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞரான ஹரிஷ் சால்வே அரசியலமைப்புச் சட்டம், வணிக மற்றும் வரிச்சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர், ஒரு வழக்கிற்கு ஊதியமாக கோடிக்கணக்கில் பெறும் சால்வே இந்த வழக்கில் ஒரு ரூபாய் மட்டும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.