அரசு மருத்துவ கல்லூரிகளில் பட்டம் பெறுவோர் கிராமங்களில் பணிபுரிய வேண்டும்: யோகி ஆதித்யநாத்
அரசு மருத்துவ கல்லூரிகளில் படித்து பட்டம் பெறுவோர் கிராமங்களில் 2 வருடங்கள் பணிபுரிய வேண்டும் என உத்தர பிரதேச முதல் மந்திரி கூறியுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் ஆயுஷ்மான் பாரத் திவாஸ் திட்டத்தின் ஒரு வருட நிறைவை குறிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். நாட்டில் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் பலனடையும் நோக்குடன் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் யோகி பேசும்பொழுது, கடந்த ஒரு வருடத்திற்கு முன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபொழுது பல்வேறு சவால்களை நாம் சந்திக்க வேண்டி இருந்தது. குடிமக்களுக்கு திட்டத்தின் பலன் சரியான காலத்தில் சென்று சேருவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம். இது உலகின் மிக பெரிய சுகாதார திட்டம் ஆகும் என்று அவர் கூறினார்.
அவர் தொடர்ந்து பேசும்பொழுது, அரசு மருத்துவ கல்லூரிகளில் படித்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்கள், மேல்படிப்புக்கு செல்லவில்லை என்றால் அவர்கள் கிராமங்களில் 2 வருடங்கள் பணிபுரிய வேண்டும். எம்.டி. மற்றும் எம்.எஸ். படிப்பவர்களும் கிராமப்புற பகுதிகளில் ஒரு வருடம் வரை பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.