பேருந்து ஓட்டுனர் ஹெல்மட் போடவில்லை என ரூ.500 அபராதம்: நீதிமன்றத்தை நாட உரிமையாளர் முடிவு

உத்தரபிரதேசத்தில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் ஹெல்மட் போடவில்லை என போக்குவரத்து துறையால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-09-21 10:17 GMT
லக்னோ,

புதிய மோட்டார் வாகனச் சட்டம் செப் 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலானது. பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராத அடிப்படையில் பல மாநிலங்கள் அப்படியே அபராதத்தை அமல்படுத்தியுள்ளன. இதனால் பல மாநிலங்களில் வாகன ஓட்டிகளை போலீசார் கடும் சிரமத்துக்குள்ளாக்குகின்றனர்.

ஒடிசா, அரியானா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் வாகன ஓட்டிகளிடம், ரூ.70 ஆயிரம், ரூ.80 ஆயிரம் என வசூலித்தனர். நாகாலாந்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு ஓவர் லோடு உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.2 லட்சம் வரை டெல்லி போலீசார் அபராதம் விதித்தனர். ரூ.11,000 ரூபாய் அபராதம் விதித்ததால் விரக்தி அடைந்த டெல்லியைச் சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தையே தீயிட்டு எரித்தார்.

இந்தநிலையில்,  நொய்டாவில் சுமார் 40 முதல் 50 பேருந்துகளை வைத்து தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் நிரங்கர் சிங். இவருக்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் பேருந்தை இயக்கியதாக கூறி, நிரங்கர் சிங்குக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து ஆன்லைன் மூலம் ரசீது அனுப்பப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11ம் தேதியிடப்பட்ட ஆன்லைன் ரசீதை, தனது ஊழியர் மூலம் நிரங்கர் சிங் உறுதி செய்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தேவை ஏற்பட்டால் தனக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் போக்குவரத்துத் துறையின் அவல நிலையை இந்த ரசீது காட்டுவதாகவும், நாள்தோறும் விதிக்கப்படும் நூற்றுக்கணக்கான அபராதங்களின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும் நிரங்கர் சிங் தெரிவித்துள்ளார். 

இதனிடையே இந்த ரசீது போக்குவரத்து துறையால் வழங்கப்பட்டிருப்பதாகவும், போக்குவரத்து காவலர்களால் வழங்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த விவகாரம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், ஏதேனும் பிழை இருந்தால் சரிசெய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்