விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்று முடிகிறது - மீண்டும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை

விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்று முடிகிறது. அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

Update: 2019-09-19 23:45 GMT
பெங்களூரு,

சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவில் மட்டும் அல்ல, உலகமெங்கும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அத்தனை நாடுகளிலும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதற்கு அடிப்படை காரணம், வளர்ந்த நாடுகளால் கூட இதுவரை தரை இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாத, நிலவின் தென் துருவப்பகுதியை சந்திரயான்-2 விண்கலம் குறி வைத்ததுதான்.

ஒவ்வொரு கட்டத்தையும் விக்ரம் லேண்டர் நிச்சயித்தபடி வெற்றிகரமாக கடந்து கொண்டிருந்தது.

7-ந் தேதி அதிகாலையில் நிலவின் தென் துருவப்பகுதியில் விக்ரம் லேண்டர் எப்படியும் மெல்ல மெல்ல தரை இறங்கி விடும் என்று ஒட்டுமொத்த உலகமும் ஆவலோடு எதிர்பார்த்தது. பொதுமக்களும் மிகுந்த ஆர்வமுடன் டி.வி.க்கள் முன்பாக அமர்ந்து கொண்டிருந்தனர்.

அதிகாலை 1.30 மணியில் இருந்து விக்ரம் லேண்டரை சரியாக தரை இறக்க செய்வதற்கான நடவடிக்கையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். விக்ரம், கடினமான இடங்களை எல்லாம் கடந்து தரை இறங்கி இருக்க வேண்டிய இடத்தை அடைவதற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்று தெரியவந்தது.

அது இஸ்ரோவுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகத்துக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது,

அடுத்த கேள்வி எழுந்தது, விக்ரம் லேண்டரின் கதி என்ன? அதன் ஆயுள் காலம் 14 நாட்கள் தானே, இனி என்ன ஆகும்? இது விஞ்ஞானிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அடுத்த 2 நாளில் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியது. விக்ரம் லேண்டர் அதன் நான்கு கால்களில் நிற்காமல், ஒரே துண்டாக விழுந்து சாய்ந்து கிடப்பது அதில் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டருடனான தொடர்பை மீட்டெடுக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

இந்த முயற்சியில் இஸ்ரோவுடன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவும் களம் இறங்கியது.

நாசாவின் ஜெட் புரபல்சன் லேபரட்டரி, விக்ரம் லேண்டருக்கு ‘ஹலோ’ என்ற செய்தியை ரேடியோ சிக்னல்கள் வாயிலாக அனுப்பி பார்த்தது. ஆனால் அதற்கும் பதில் இல்லை.

இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை நாசாவின் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கிற இடத்துக்கு மேலே வரும், அதன் கேமராக்கள் விக்ரம் லேண்டரைப் படம் எடுத்து அனுப்பும் என தகவல்கள் வெளி வந்தன.

ஆனால் விக்ரம் லேண்டர் விழுந்து கிடந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் போனதால் படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா கூறுகிறது.

இருப்பினும் அந்தப் பகுதியை எல்.ஆர்.ஓ., ஆர்பிட்டர் படங்கள் எடுத்து அனுப்பி இருக்கிறது. அதை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.

இதை எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் துணை திட்ட விஞ்ஞானி ஜான் கெல்லர் உறுதி செய்திருக்கிறார்.

ஆனாலும் அதை வைத்துக்கொண்டு பெரிதாக எதையும் சாதிக்கும் நிலை இல்லை.

ஏனென்றால் விக்ரம் லேண்டரின் ஆயுள் காலமான 14 நாள் இன்று முடிகிறது. மீண்டும் அதனுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சிகள் பலன் தராமல் போய் விட்டது.

நிலவின் தென் துருவப்பகுதியில் ஆராய்ந்து புதிய வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் லேண்டர் கனவாக கலைந்து இருக்கிறது.

இந்த திட்டத்தில் தங்களோடு தோளோடு தோளாக நின்ற மக்களுக்கு நன்றி சொன்ன இஸ்ரோவின் வார்த்தைகள் இங்கு நினைவு கூரத்தக்கவை.

“உலகமெங்கும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கையாலும், கனவுகளாலும் நாங்கள் உத்வேகம் பெற்று முன்னோக்கி நடைபோடுவதை தொடர்வோம். வானையே எப்போதும் நாங்கள் இலக்காக கொள்வோம்” என்ற இஸ்ரோ விஞ்ஞானிகளின் கனவுகள் இனி வரும் காலத்தில் மெய்ப்படும் என்பது மக்களின் நம்பிக்கையாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்