ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 3-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 3-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த மாதம் 20-ந் தேதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மறுநாள் ஆக.21ல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்தது. ப.சிதம்பரத்தை செப்டம்பர் 5 முதல் 19 வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்று ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிந்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறப்பு நீதி மன்றம் ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 3ம் தேதி வரை சிறை நீட்டித்து உள்ளது. ப.சிதம்பரத்திற்கு உடல்நலக் குறைவு காரணமாக நீதிமன்றக் காவல் நீட்டித்ததற்கு அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார்.
ப.சிதம்பரம் கடந்த 16-ஆம் தேதி தனது பிறந்த நாளை டெல்லி திகார் சிறையிலேயே கொண்டாடினார்.