சவுதியில் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

சவுதியில் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.;

Update: 2019-09-16 16:10 GMT
புதுடெல்லி,

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறிவைத்து நேற்று முன்தினம் ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் அங்கு தீப்பிடித்து எரிந்தது.

தீ உடனடியாக அணைக்கப்பட்டதாக சவுதி அரசு தெரிவித்தாலும், சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஏமனில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றனர். ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்திருப்பதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்தது.

இந்தநிலையில் சவுதியில் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறிவைத்து  தாக்குதல்கள் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம். பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் பதிலடி தர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்