கமல் மற்றும் மு.க.ஸ்டாலின் இருவரும் இந்தி திணிப்பு என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் - சுப்ரமணியசாமி

கமல் மற்றும் மு.க.ஸ்டாலின் இருவரும் இந்தி திணிப்பு என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியசாமி விமர்சித்துள்ளார்.;

Update: 2019-09-16 11:42 GMT
புதுடெல்லி,

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரியும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், 'இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்' என்று தெரிவித்து இருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய மந்திரி அமித்ஷாவின்  இந்த அறிவிப்புக்கு எதிராக இரண்டாவது மொழிப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

"நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த 'ஷா'வோ மாற்ற முயற்சிக்க கூடாது" என்று மத்திய பாஜக அரசை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றின் மூலம் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கமலும்,  மு.க.ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இந்தி எதிர்ப்பு குறித்தான அவர்களது கருத்துக்களை பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கமல் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இருவரும் இந்தி திணிப்பு என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தி கற்பிக்க கூடாது என்று அவர்கள் திணிப்பதை என்னவென்று சொல்வது? முதலில் இந்தியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் கொடுக்கலாம். எதைத் தேர்வு செய்து கொள்வது என்பது மாணவர்களின் முடிவாக இருக்கட்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்