பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டு வசதி, ஏற்றுமதி துறைகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை வழங்கும் அறிவிப்புகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

Update: 2019-09-14 23:30 GMT
புதுடெல்லி,

நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. முக்கிய தொழில் துறைகள் சரிவை சந்தித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 சதவீதம் என்ற அளவில் சரிந்து உள்ளது.

இந்த மந்தமான நிலையில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி இருக்கிறது.

ஏற்கனவே கடந்த மாதம் 23-ந் தேதி டெல்லியில் நிருபர்களை சந்தித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மோட்டார் வாகனத்துறைக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் சலுகைகள் அறிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நிருபர்களை சந்தித்து மேலும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார். அவை வீட்டு வசதி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி மற்றும் ஏற்றுமதி தொழில் துறைக்கு ரூ.50 ஆயிரம் கோடி, ஆக மொத்தம் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சலுகைகளை அறிவித்தார்.

அபபோது அவர் கூறியதாவது:-

தொடங்கி நிறைவு பெறாமல் நின்று போயுள்ள வீட்டு வசதி திட்டங்களை நிறைவு செய்வதற்காக ரூ.20 ஆயிரம் கோடியில் நிதி ஏற்படுத்தப்படும்.

இந்த நிதியில் ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும். எஞ்சிய ரூ.10 ஆயிரம் கோடியை வெளிமுதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும். இந்த நிதியைக் கொண்டு, திவால் நடவடிக்கைக்கு ஆளாகாத, வாராக்கடன் முத்திரை குத்தப்படாத வீட்டு வசதி நிறுவனங்களுக்கு திட்டத்தை பூர்த்தி செய்வதற்காக கடன் அளிக்கப்படும்.

இதன் மூலம் வீடு வாங்குகிற 3½ லட்சம் பேர் பலன் பெறுவார்கள். வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், தளர்த்தப்பட்ட விதிகளின்கீழ் வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

வீட்டு வசதி கடன்களுக்கான வட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வீட்டு வசதி கடன்களை நாடும் அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.

ஏற்றுமதியாளர்கள் ஏற்று மதியின்போது செலுத்துகிற வரிகளை திரும்ப பெறுவதற்கான புதிய திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். இது தற்போதுள்ள திட்டத்தை விட ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கம் தரக்கூடியதாக அமையும்.

இந்த திட்டத்தினால் அரசு ரூ.50 ஆயிரம் கோடி விட்டுக் கொடுக்க வேண்டியது வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதிக்கான தொழில் முதலீடுகளை வழங்குகிற வங்கிகளுக்கு அதிகளவில் காப்பீடு வழங்க ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,700 கோடி அனுமதிக்கப்படும். இது, வட்டி உள்ளிட்ட ஏற்றுமதி கடன் செலவுகளை குறைக்க உதவும். குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பலன் பெறும்.

ஏற்றுமதி கடன்களுக்கு முன்னுரிமை வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. ஏற்றுமதிக்காக கடன்கள் வழங்க ரூ.36 ஆயிரம் கோடி முதல் ரூ.68 ஆயிரம் கோடி வரையில் ரிசர்வ் வங்கி விடுவிக்கும்.

உலக அளவில் பிரபலமாக உள்ள துபாய் ஷாப்பிங் திருவிழா போன்று இந்தியாவிலும் 4 இடங்களில் மெகா ஷாப்பிங் திருவிழா மார்ச் மாதம் நடத்தப்படும்.

விலை உயர்ந்த ஆபரண கற்கள், நகைகள், கைவினைப்பொருட்கள், யோகா, சுற்றுலா, ஜவுளி, தோல் துறைகளை மையப்படுத்தி இந்த ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் இந்த நடவடிக்கையும் சேர்கிறபோது அது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவும். இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

பணவீக்கம் 4 சதவீத அளவுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தொழில்துறை உற்பத்தி, முதலீடுகளில் முன்னேற்றம் காணப்படுகிறது.

வங்கிகளில் இருந்து அதிகளவில் கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடன்களுக்கான வட்டிகளையும் வங்கிகள் குறைக்கத்தொடங்கி இருக்கின்றன. இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்கு 19-ந் தேதி பொதுத்துறை வங்கி தலைவர்களை சந்திக்க இருக்கிறேன்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்குகிற கடன்களுக்கான வட்டியை கடந்த பிப்ரவரி மாதம் முதல் 110 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு குறைத்துள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு வங்கிகள் வழங்குகிற கடன்களுக்கு வட்டியை அந்த அளவுக்கு குறைக்கவில்லை. ஆனால் இதில் வட்டி விகிதங்கள் குறைப்பை விரைவாக, முழுமையாக அமல்படுத்த வங்கிகளுக்கு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் செய்திகள்