லாரி உரிமையாளருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம் விதித்த ஒடிசா போக்குவரத்து போலீசார்
புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் கீழ், நாகலாந்தைச் சேர்ந்த லாரி உரிமையாளருக்கு ரூ.6.5 லட்சம் அபராதத்தை ஒடிசா போக்குவரத்து போலீசார் விதித்துள்ளனர்.
புவனேஷ்வர்,
நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தம் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
மோட்டார் வாகனச்சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் ரூ.10 ஆயிரமாக வசூலிக்கப்படும். இதேபோல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவருக்கு அபராதத்தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகையால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேற்குவங்கத்தில் புதிய வாகன சட்டத்தை அமல்படுத்தப்போவது இல்லை என அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், புதிய மோட்டார் வாகன திருத்தச்சட்டத்தின் கீழ், நாகாலாந்தைச்சேர்ந்த லாரி உரிமையாளருக்கு ஒடிசா போக்குவரத்து போலீசார் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறு, காற்று, ஒலி மாசு, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றியதாக விதிமீறல், 2014 முதல் வரி செலுத்தாதது, வாகன காப்பீடு இல்லாதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.