வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கினை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2019-09-13 22:00 GMT
புதுடெல்லி,

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த சட்ட வழக்குகளில் சிக்குகிற அதிகாரிகளை போலீசார் தாமாக கைது செய்யக்கூடாது; அவர்களை நியமித்த அதிகார அமைப்பின் ஒப்புதலைப் பெற்றுத்தான் கைது செய்ய வேண்டும்; மற்றவர்களை பொறுத்தமட்டில், போலீஸ் சூப்பிரண்டு அனுமதி பெற்றுத்தான் கைது செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்ற விமர்சனம் எழுந்தது. இதையொட்டி பல இடங்களில் போராட்டங்களும் வெடித்தன.

அதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு முறையிட்டது.

அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஷ்ரா, யு.யு.லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பி மறு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்