ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது நாளை உத்தரவு
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்த ப.சிதம்பரத்தின் மனு மீதான விசாரணை சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்வில் நடைபெற்றது.
அமலாக்கத்துறை சார்பில் வாதாடிய துஷார் மேத்தா கூறியதாவது:-
வழக்கு விசாரணை எப்படி செல்ல வேண்டும் என்பதை குற்றம் சாட்டப்பட்ட நபர் வழி நடத்தக்கூடாது. எனவே, தான் சரணடைவதாக தெரிவிக்கும் ப.சிதம்பரத்தின் மனு நிராகரிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட தேதியில் ப.சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட முடியாது. தேவைப்படும்போது அமலாக்கத்துறையின் காவலுக்கு விண்ணப்பிப்போம். ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க விரும்பவில்லை என வாதிட்டார்.
ப.சிதம்பரம் தரப்பில் வாதாடிய கபில் சிபல் கூறியதாவது:
குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது. ஆனால், தற்போது அவரது சிறைவாசத்தை நீட்டிக்க விரும்புகிறது. ப.சிதம்பரத்தின் சிறைவாசத்தை நீட்டித்து, அவருக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்துவது, தவறான நோக்கமாகும். ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆக. 20-ம் தேதி, அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை வந்தது. அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய்குமார் குஹார் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மனு மீது நாளை பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்