இம்ரான்கான் கட்சித்தலைவர் இந்தியாவில் தஞ்சம்: பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு ஆபத்து என குற்றச்சாட்டு

இம்ரான்கான் கட்சித்தலைவர் ஒருவர் பஞ்சாப்புக்கு குடும்பத்துடன் வந்து, தஞ்சம் கோரி உள்ளார். அவர் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார்.;

Update: 2019-09-10 07:47 GMT
புதுடெல்லி,

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவர், பல்தேவ் குமார் (வயது 43). இவர் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்.

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஸ்வாட் பகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.

இவரது மனைவி பவானா சேத்தி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தை சேர்ந்தவர்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக கூறி, பல்தேவ் குமார், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த மாதம் பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டம், கன்னா என்ற இடத்துக்கு வந்து விட்டார்.

நேற்று அவர் கன்னாவில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், “நான் தஞ்சம் கேட்டுத்தான் இங்கு வந்துள்ளேன். எங்களுக்கு உதவுமாறு பிரதமர் மோடியைக் கேட்டுக்கொள்வேன்” என கூறினார்.

அவரிடம் நிருபர்கள், “நீங்கள் ஏன் பாகிஸ்தானை விட்டு வந்தீர்கள்?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “பாகிஸ்தானில் தற்போது நிலவரம் என்ன என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது. இம்ரான்கான் பாகிஸ்தானில் ஆட்சிக்கு வந்தபோது பாகிஸ்தானின் தலையெழுத்து மாறும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நீங்களும் பாகிஸ்தானில் நடப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். நாங்களும் பார்க்கத்தான் செய்கிறோம். எங்கள் சீக்கிய இனப்பெண் கடத்தப்பட்டார். இத்தகைய செயல்கள் நடக்கக்கூடாது” என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “சிறுபான்மையினருக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ஏன், முஸ்லிம்களுக்குக்கூட அங்கு பாதுகாப்பு இல்லை. அங்கு அதிகாரம் எல்லாம் ராணுவத்துக்குத்தான். சிறுபான்மையினர் ஆபத்தான சூழலில் உள்ளனர்” என கூறினார்.

பல்தேவ் குமார் கடத்தப்பட்டதாக கூறிய சீக்கிய பெண், பலவந்தமாக அவரது வீட்டில் இருந்து கடத்திச்செல்லப்பட்டு, மத மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்தினரின் கதறல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

பல்தேவ் குமார் தொடர்ந்து நிருபர்களிடம் பேசுகையில், “ எனது உறவு குடும்பங்களை எல்லாம் பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு கூறி உள்ளேன். சிந்து மற்றும் நங்கானா சாகிப் பகுதியை சேர்ந்த அந்த குடும்பங்கள், எனக்கு தஞ்சம் கிடைத்து விட்டால் தாங்களும் பாகிஸ்தானில் இருந்து வந்து விடுவதாக கூறினர்” என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்