தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
நிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகளைப்போல் இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
ஏற்கனவே சந்திரயான்-1 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்த இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) விஞ்ஞானிகள் அடுத்ததாக சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி, அங்கு தரை இறங்கச் செய்து ஆய்வு நடத்த தீர்மானித்தனர்.
இதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பினார்கள். இதற்கான திட்ட செலவு ரூ.978 கோடி ஆகும். ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை கொண்டதுதான் சந்திரயான்-2 விண்கலம்.
முதலில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலம் பின்னர் அதில் இருந்து விடுபட்டு நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு சென்றது. அதன்பிறகு அவ்வப்போது சுற்றுவட்ட பாதையின் உயரம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விண்கலம் படிப் படியாக நிலவை நெருங்கியது.
கடந்த 2-ந் தேதி ஆர்பிட்டரில் இருந்து, பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவை சுற்றி வந்தது. நேற்று முன் தினம் குறைந்தபட்சமாக 35 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 101 கி.மீ. தொலைவிலும் விக்ரம் லேண்டர் நிலவை சுற்றி வந்தது.
நேற்று அதிகாலை 1.54 மணிக்கு லேண்டரை நிலவில் மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். நிலவின் தென் துருவத்தில் சுமார் 1½ கி.மீ. இடை வெளியில் அமைந்துள்ள மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் ஆகிய இரு பள்ளங்களுக்கு இடையேயான சமதள பரப்பில் தரை இறக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கை கோள் கட்டுப்பாட்டு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதை பார்ப்பதற்காக அங்கு பிரதமர் மோடி வந்திருந்தார். இஸ்ரோ தலைவர் கே.சிவன், முன்னாள் தலைவர்கள் ஏ.எஸ்.கிரண்குமார், கே.ராதாகிருஷ்ணன், கே.கஸ்தூரிரங்கன் மற்றும் விஞ்ஞானிகள், மாணவர்கள் திரண்டு இருந்தனர். விக்ரம் லேண்டர் தரை இறங்குவதை பார்க்க அவர்கள் மிகவும் ஆவலுடன் காத்து இருந்தனர்.
நிலவில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் இருந்த போது, லேண்டரை நிலவில் இறக்குவதற்கான சமிக்ஞை அதிகாலை 1.38 மணிக்கு, தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து லேண்டரின் கீழ் பகுதியில் உள்ள 4 என்ஜின்கள் இயங்க தொடங்கின. அந்த என்ஜின்கள் விசையை கீழ்நோக்கி தள்ளியதால் லேண்டர் நிலவின் தரைப்பகுதியை நோக்கி மெதுவாக இறங்கி வந்தது.
இதை பார்த்ததும் தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தனர். என்றாலும் எல்லோரிடமும் கடைசி நேர பரபரப்பு காணப்பட்டது.
கீழ்நோக்கி வந்து கொண்டிருந்த லேண்டர் திட்டமிட்டபடி 1.54 மணிக்கு நிலவில் குறிப்பிட்ட இடத்தில் தரை இறங்கி இருக்க வேண்டும். ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு மேலே 2.1 கி.மீ. உயரத்தில் வந்து கொண்டிருந்த போது துரதிருஷ்டவசமாக, லேண்டருடனான தரை கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.
இதனால் விஞ்ஞானிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த அவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் கடுமையாக போராடியும் பலன் இல்லை. லேண்டரில் ஏதாவது சிறிய பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம், நிலைமை உடனடியாக சரியாகிவிடும் என்று பதற்றத்துடன் சற்று நேரம் காத்து இருந்தனர். ஆனால் விடுபட்ட தொடர்பு மீண்டும் கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் பிரதமர் மோடியிடம் சென்று, லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவலை வருத்தத்துடன் தெரிவித்தார்.
பின்னர் அந்த தகவலை அங்கு கூடி இருந்தவர்கள் மத்தியில் அறிவித்தார். அப்போது அவர், “விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தரை பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. நிலவுக்கு அருகாமையில் 2.1 கி.மீ. உயரத்தில் வந்து கொண்டிருந்த போது விக்ரம் லேண்டருக்கும், தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் திடீரென்று தொடர்பு துண்டிக்கப்பட்டது” என்று நா தழுதழுக்க கூறினார். விக்ரம் லேண்டரில் இருந்து கடைசியாக கிடைத்த தரவுகளை ஆய்வு செய்து வருவதாகவும் அப்போது அவர் கூறினார்.
அவர் இவ்வாறு கூறியதை கேட்டதும் அங்கிருந்த அனைவரும் சோகத்தில் மூழ்கினார்கள்.
இதைத்தொடர்ந்து, கே.சிவனுக்கும், மற்ற விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
அதைத்தொடர்ந்து பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ சனிக்கிழமை மாலை உறுதிபடத் தெரிவித்தது.
இந்நிலையில் நிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.
'தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் எங்கே விழுந்துள்ளது என்பது குறித்து ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களின் வாயிலாகத் தெரிந்துள்ளது. ஆனால் அதன் ஆன்டெனா வழியாக அதனுடனான தகவல் தொடர்பை உடனடியாக உருவாக்க முடியவில்லை ' என்று தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் விரைவில் தகவல் தொடர்பை பெற முயற்சித்து வருகிறோம். விக்ரம் லேண்டரை, நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.
நிலவில் தரையிறங்க வேண்டிய இடத்திற்கு 500 மீட்டர் தொலைவில் லேண்டர் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் முழுமையாக இருப்பதாக புகைப்படத்தில் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் மூலம் மீண்டும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.