கண்ணீர் விட்டு அழுத சிவன்; கட்டியணைத்து ஆறுதல் கூறிய மோடி - இஸ்ரோ மையத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

பிரதமர் மோடியிடம், இஸ்ரோ தலைவர் சிவன் கண்கலங்கினார். பிரதமர் மோடி அவரைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

Update: 2019-09-07 04:53 GMT
பெங்களூரு,

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை தரையிறக்கும் போது திடீரென்று சிக்னலை துண்டித்தது. இதனால் சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்வதில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் மைக் மூலம் அறிவித்தார். அப்போது அவர் தழுதழுத்த குரலில் இதனை தெரிவித்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி, விஞ்ஞானிகள் மத்தியில் பேசுகையில் நம்பிக்கையூட்டினார். அப்போது அவர் ‘சந்திரயான்-2 விண்கலத்தின் தடைகளால் சோகமடைய வேண்டாம் என்றும் விஞ்ஞானிகளுக்கு புதிய விடியல் காத்திருக்கிறது’ என்றார்.

பின்னர் நேற்று காலை 8 மணி அளவில் பிரதமர் மோடி இஸ்ரோ செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவருடன் இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட அதிகாரிகள் வெளியே வந்தனர்.

காரில் ஏறுவதற்கு முன்பு பிரதமர் மோடி, சிவனுக்கு கைகுலுக்கி விடைபெற முயன்றார். அந்த சமயத்தில் சிவன், சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் நிகழ்வு பின்னடைவை சந்தித்ததை நினைத்து திடீரென்று கண்ணீர்விட்டு அழுதார். இதை பார்த்த பிரதமர் மோடி, சிவனை கட்டியணைத்து முதுகில் தட்டிக்கொடுத்தபடி ஆசுவாசப்படுத்தினார்.

இந்த நிகழ்வு சுமார் 2 நிமிடம் நீடித்தது. உணர்ச்சி பெருக்கில் பிரதமர் மோடியும் கண்கலங்கிய படி சிவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பார்த்து அங்கு கூடியிருந்த விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் சில நிமிடம் மவுனமாக நின்றிருந்தனர்.

இஸ்ரோ தலைவர் சிவன் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்