அயோத்தி வழக்கு விசாரணை: நேரடி ஒளிபரப்பு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

அயோத்தி வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2019-09-06 23:34 GMT
புதுடெல்லி,

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் அல்லது அதன் பதிவை ஒளிபரப்ப வேண்டும் என்று கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் பிரசாரகரான கோவிந்தாச்சார்யா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவித்தாச்சார்யா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங், இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசியல் சாசனம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விசாரணையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கோவிந்தாச்சார்யா சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்