கட்டுப்பாடுகளின் மத்தியிலும் காஷ்மீர் மசூதிகளில் தொழுகை நடந்தது

காஷ்மீர் மசூதிகளில் கட்டுப்பாடுகளின் மத்தியிலும் தொழுகை நடைபெற்றது.

Update: 2019-09-06 23:25 GMT
ஸ்ரீநகர்,

மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை முன்னிட்டு போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் காஷ்மீர் பிராந்தியத்தில் இன்னும் அமலில் இருக்கின்றன. இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் நேற்று காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மசூதி உள்ளிட்ட முக்கிய மசூதிகளில் மக்கள் தொழுகைக்கு அனுமதிக்கப்படவில்லை. அந்த மசூதிகள் மூடப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன. இவற்றை தவிர கிராமங்கள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மசூதிகளில் தொழுகை நடந்தது.

இதைப்போல ஸ்ரீநகரில் உள்ள சந்தைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் நேற்றும் மூடப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் காஷ்மீர் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் 33-வது நாளாக நேற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்