ஏ.கே. 47 துப்பாக்கியுடன் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பயங்கர குற்றவாளியை விடுவித்து சென்ற கும்பல்

ஏ.கே. 47 துப்பாக்கியுடன் ராஜஸ்தான் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கு 5 கொலை செய்த ஒரு குற்றவாளியை விடுவித்து சென்றது.;

Update: 2019-09-06 12:36 GMT
ஜெய்ப்பூர்

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் பெஹ்ரர் காவல் நிலையத்தில் அரியானாவின் மிகவும் தேடப்படும் பெரும் குற்றவாளிகளில் ஒருவரான  விக்ரம் குர்ஜாரை  கைது செய்து அடைத்து இருந்தனர்.

குர்ஜார் அரியானாவின் டாக்டர் குல்தீப் கும்பலைச் சேர்ந்தவர். குர்ஜார் மீது அங்கு ஒரு கான்ஸ்டபிளைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது ஐந்து கொலை வழக்குகள் உள்ளன. மற்றும் அவரை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.  குர்ஜாரை வியாழக்கிழமை இரவு பெஹ்ரர் போலீசார் கைது செய்தனர்.

இன்று காலை  சினிமா பாணியில் சர சரவென 3க்கும் மேற்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையத்தை சுற்றி  முற்றுகையிட்டன. அதில் இருந்து இறங்கிய 20க்கும் மேற்பட்டவர்கள் ஏ.கே .47 ரக துப்பாக்கிகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.

அவர்கள் போலீஸ் நிலையத்தை நோக்கி 40 முறை சுட்டனர்.  பின்னர் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த அந்த கும்பல்  பயங்கர குற்றவாளி விக்ரம் குர்ஜாரை விடுவித்து சென்றனர்.

குற்றவாளிகள் சிறிது தூரம் சென்றனர், ஆனால் அவர்களது வாகனம்  நின்று விட்டது. பின்னர் அவர்கள் நிறுத்தப்பட்டிருந்த பிக்-அப் வேனில் நுழைந்து அங்கிருந்து சென்று உள்ளனர். 

சிறிது தூரம் சென்றதும்  துப்பாக்கி முனையில் மிரட்டி ஸ்கார்பியோவை கடத்தி அரியானாவை நோக்கி தப்பிச் சென்றதாக பெஹ்ரர் எஸ்.பி. அமன்தீப் கபூர் தெரிவித்துள்ளார். போலீசார் குற்றவாளிகளை  பின் தொடர்ந்தனர் ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

 ராஜஸ்தான் டிஜிபி பூபேந்திர யாதவ் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படைகளை அனுப்பி உள்ளார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ் அரசை பாரதிய ஜனதா  தாக்கி உள்ளது.

மேலும் செய்திகள்