வெள்ளத்தில் மிதக்கும் மும்பை - ரெட் அலர்ட் எச்சரிக்கை ; பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை
அடுத்த 48 மணி நேரத்தில் மும்பை நகரத்தின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மும்பை,
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை முதல் இடைவிடாது பெய்து வரும் கனமழையாலும், கடலில் அலைகள் ஆர்ப்பரிப்பதாலும், மும்பை மாநகரம் தண்ணீரில் மிதந்து வருகிறது.
3 முதல் 5 அடி உயரத்துக்கு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில் வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. பேருந்து, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கிய ரயில்களில் இருந்த நான்காயிரத்து 500 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
மும்பை மாநகராட்சி, போலீசார், பேரிடர் மேலாண்மை குழுவினருடன், கடற்படையும் மீட்பு பணிகளில் களத்தில் இறங்கியுள்ளன. மும்பை மற்றும் புறநகர் சாலைகள் ஆறுகள் போல காட்சியளிக்கின்றன. மும்பை மாநகரில் ஓடும் மித்தி ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் உபரி நீர் வெளியேற்றம் தொடங்கி உள்ளதால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. புனே, பால்கர், தானே, மும்பை, ரெய்காட், ரத்தினகிரி சித்துதுர்கா, சட்ரா, கோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாயும் ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல மேற்கு நோக்கி பாயும் கிருஷ்ணா, பீமா, சாவித்ரி மற்றும் அதன் கிளை நதிகளிலும் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் நகரத்தின் பல பகுதிகளிலும் புறநகர்ப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) அறிவித்து உள்ளது.
அடுத்த 48 மணி நேரங்களுக்கு நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் மிக அதிக அளவில் இடைவிடாத மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி கூறி உள்ளது.
இதனிடையே, மும்பை, தானே, ரெய்காட் மற்றும் கொங்கன் பகுதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.