தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக நியமனம்: தெலுங்கானா மக்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் கிரண்பெடி பேட்டி
தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதால் அம்மாநில மக்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்று கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிந்தேன். அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. எதிர்க்கட்சிகள் என்றால் எதிர்க்கத்தான் செய்வார்கள். மாநில கவர்னர்களை இந்திய அரசு தான் நியமிக்கிறது. நியமனத்தில் தவறு ஏதும் இல்லை.
தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் சேவகராகவும், மருத்துவராகவும் சேவை செய்தவர். அவரது இந்த நியமனத்தால் தெலுங்கானா மாநில மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.