நவிமும்பையில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பையில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2019-09-03 05:52 GMT
மும்பை,

மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை அருகே யுரானில் ஓ.என்.ஜி.சி.க்கு  சொந்தமான எண்ணெய், எரிவாயு சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை  செய்துகொண்டிருந்தபோது திடீரென ஆலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. பின்னர் மற்ற இடங்களுக்கும் பரவியது. காலை 7:20 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டு உள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இதனால் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசாரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி  நிலைமையைக்  கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஐந்து ஓ.என்.ஜி.சி தொழிலாளர்கள் மற்றும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களால், ஆலையிலிருந்து 1 கி.மீ தூரத்திற்கு உள்ள பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த விபத்து காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்று ஓஎன்ஜிசி கூறி உள்ளது.

ஓ.என்.ஜி.சி இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமாகும், இது உள்நாட்டு உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை அளிக்கிறது.

மேலும் செய்திகள்