காஷ்மீரில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் - மசூதிகளில் தொழுகைக்கு அனுமதி

காஷ்மீரில் அனைத்து பகுதிகளிலும் நிலைமை சுமுகமாக இருக்கும் நிலையில், அங்கு இன்று (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.

Update: 2019-08-12 00:00 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஊரடங்கு, 144 தடை உத்தரவு, தொலைதொடர்பு சேவைகள் முடக்கம் என கடந்த 5-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது காஷ்மீரின் பல பகுதிகளில் நிலைமை சீரடைய தொடங்கி உள்ளது. குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. எனவே அந்த மாவட்டங்களில் அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளன.

இதனால் அங்கு கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டும், அரசு அலுவலகங்கள் செயல்பாட்டுக்கு வந்தும், கடைத்தெருக்களில் வியாபாரம் சீரடைந்தும் இருக்கின்றன. மக்களும் தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி அன்றாட பணிகளில் மூழ்கியுள்ளனர்.

ஆனால் காஷ்மீர் மற்றும் கார்கில் போன்ற பகுதிகளில் நிலைமை மேம்படவில்லை. ஸ்ரீநகரில் நேற்றும் போராட்டம் நடந்தது. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து அமலில் இருக்கின்றன.

இந்த நிலையில் முஸ்லிம்களின் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. காஷ்மீரில் அதிக அளவு முஸ்லிம்கள் வசிப்பதால், இந்த பண்டிகை கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

மக்கள் பாதுகாப்பாகவும், எந்த தொந்தரவும் இன்றியும் பக்ரீத் கொண்டாடுவதற்காக, கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்படி மக்கள் தங்கள் அருகில் உள்ள மசூதிகளில் தொழுகைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 9-ந் தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டது போல இன்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அதிக அளவில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை.

இதைப்போல பண்டிகை கொண்டாட்டம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களும் போதுமான அளவுக்கு இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் ஒரு மாதத்துக்கும் மேல் தேவைப்படும் அரிசி, கோதுமை, இறைச்சி, கோழி, மண்எண்ணெய், சமையல் கியாஸ், டீசல் போன்ற பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கின்றன.

சிறப்பு வேன்கள் மூலம் காய்கறிகள், கியாஸ், கோழி, முட்டை போன்ற பொருட்கள் மக்களின் வீடுகளுக்கே கொண்டு கொடுக்கப்படுகின்றன. ரேஷன் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஏ.டி.எம். எந்திரங்கள் அனைத்தும் சீராக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதுடன், அவற்றில் சீரான முறையில் பணமும் நிரப்பி வைக்கப்படுகின்றன.

மாநிலம் முழுவதும் அமைதி நிலவுவதாகவும், மக்கள் எந்தவித வதந்தியையும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய-மாநில அரசுகள் தெரிவித்து உள்ளன. குறிப்பாக பள்ளத்தாக்கு பகுதியில் எந்த வன்முறையும் நிகழவில்லை எனக்கூறியுள்ள மாநில அரசு அதிகாரி ஒருவர், மக்கள் அனைவரும் பக்ரீத் பண்டிகைக்கான பொருட்களை சந்தைகளில் இருந்து வாங்கி செல்வதாக கூறினார்.

மக்களுக்கு எந்த சிரமும் ஏற்படாமல் இருக்க மாநில அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக கூறிய அவர், ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கட்டுப்பாடாவது நீக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். கள நிலவரத்தின் அடிப்படையில் மத்திய அரசிடம் கேட்காமல் மாநில அரசே முடிவுகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். தொலைதொடர்பு சேவையும் கூடிய விரைவில் வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ளதால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அமைதியான பக்ரீத் கொண்டாட்டமாக இந்த ஆண்டு பண்டிகை இருக்கும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார். அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் சாதாரண மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய அவர், அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்