ஸ்ரீநகரில் தலைமை செயலகத்தில் பறக்க விடப்பட்ட மூவர்ண கொடி

ஸ்ரீநகரில் உள்ள தலைமை செயலகத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் கொடியுடன் மூவர்ண கொடியும் பறக்க விடப்பட்டு உள்ளது.

Update: 2019-08-07 05:59 GMT
ஸ்ரீநகர்,

இந்திய விடுதலைக்கு பின்னர் பாரதத்துடன் இணைந்த காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில் இந்திய அரசியல் சாசனத்தில் 370 மற்றும் 35ஏ பிரிவுகள் இணைக்கப்பட்டன. இந்த பிரிவுகள் மூலம் காஷ்மீர் அரசும், மக்களும் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்தனர். என்றாலும் அங்கு பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

சுமார் 70 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இது தொடர்பாக நாடாளுமன்ற தேர்தலின் போதே பா.ஜனதா அரசு வாக்குறுதி அளித்திருந்த நிலையில், ஆட்சி அமைத்தபின் அந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

அதன்படி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானத்தை மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் நிறைவேற்றியது. பின்னர் அது ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  எனினும் அவர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக அரசியல் சாசனப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா-2019 ஆகியவற்றை நேற்று மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்தார். 

இதன்பின்பு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் அவை நிறைவேறின.

இதில் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 351 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் வாக்களிப்பை தவிர்த்தார். இதைப்போல காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவாக 370 பேரும், எதிராக 70 பேரும் ஓட்டு போட்டனர்.

இவ்வாறு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா மற்றும் தீர்மானம் நிறைவேறியதன் மூலம் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்து ரத்தாகிறது. மேலும் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது.

இதற்கு முன்பு வரை காஷ்மீருக்கென தனிக்கொடி பயன்படுத்தப்பட்டு வந்தது.  அங்குள்ள அரசு கட்டிடங்களிலும் பறக்க விடப்பட்டு வந்தது.  இந்த நிலையில், ஸ்ரீநகரில் உள்ள தலைமை செயலகத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் கொடியுடன் இந்திய மூவர்ண கொடியும் பறக்க விடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்