பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் : காஷ்மீர் பிரச்சினை குறித்து முக்கிய முடிவு?

டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவரது தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில், காஷ்மீர் பிரச்சினை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2019-08-05 05:02 GMT
புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை குறிவைத்து நாசவேலையில் ஈடுபட பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.

இந்த தகவல்களை தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீப காலத்தில் இல்லாத வகையில் 90 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறல் ஆகியவற்றால் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீநகர் சாலையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர். ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் காஷ்மீர் முழுவதும் குவிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரையில் 35 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளனர். 

முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவரது  தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில், காஷ்மீர் பிரச்சினை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,  ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் ஆஜராக கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளார். காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் பற்றி பேச இருப்பதால் பாஜக கொறடா உத்தரவிட்டு உள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்து உள்ளது காங்கிரஸ்.

மேலும் செய்திகள்