தெலுங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதல்: 9 பெண்கள் உள்பட 14 தொழிலாளர்கள் பரிதாப சாவு

தெலுங்கானாவில் வேலை முடிந்து ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிய தொழிலாளர்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 9 பெண்கள் உள்பட 14 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

Update: 2019-08-04 15:33 GMT
நகரி,

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மீட்ஜில் மண்டலத்திற்கு கொத்தப்பள்ளி என்ற இடத்தை சேர்ந்த ஆண்-பெண் கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். நேற்று இரவு வேலை முடிந்து அவர்கள் அங்கு இருந்து தங்களது சொந்த கிராமமான கொத்தப்பள்ளிக்கு ஆட்டோவில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அந்த ஆட்டோவில் டிரைவர் உள்பட 16 பேர் பயணம் செய்தனர்.

அவர்களது ஆட்டோ கொத்தப்பள்ளியை நெருங்கிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே வந்த ஒரு லாரி திடீரென கண் இமைக்கும் நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர்.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும் மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய 4 பேரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேலும் 2 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் 9 பெண்கள் உள்பட 14 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 40 முதல் 45 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

படுகாயத்துடன் 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். விபத்து பற்றி கொத்தப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்தும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் அதிர்ச்சி அடைந்தார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அவர் தனது ஆறுதலை தெரிவித்து உள்ளார். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்