புதிய சட்டத்தின் கீழ் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக வழக்குகள் பதிவு

புதிய சட்டத்தின் கீழ் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.;

Update: 2019-08-02 22:15 GMT
மதுரா,

3 முறை தலாக் கூறி உடனடி விவகாரத்து செய்யும் நடைமுறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடந்த 30-ந்தேதி மசோதா நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து விட்டார். முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டு சிறை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த புதிய சட்டத்தின் கீழ் தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், உத்தரபிரதேசத்தின் மதுரா மாவட்டத்தை சேர்ந்த இக்ராம் என்பவர் அரியானாவை சேர்ந்த ஜுமிரத் என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். திருமணம் முடித்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு இக்ராம் தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தம்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த 30-ந்தேதியும் பேச்சுவார்த்தைக்காக கணவன்-மனைவி இருவரும் போலீஸ் நிலையம் சென்றனர். பின்னர் வெளியே வந்ததும், இக்ராம் முத்தலாக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்தார். இது தொடர்பாக அவரது மாமியார் அளித்த புகாரின் பேரில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதைப்போல மராட்டியத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த இம்தியாஸ் என்பவர் தனது மனைவி ஜென்னத் பேகத்திடம் போன் மூலம் முத்தலாக் கூறி கடந்த நவம்பர் மாதம் விவகாரத்து செய்தார். இது தொடர்பாக அந்த பெண் தற்போது அளித்த புகாரின் பேரிலும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்