நாடாளுமன்ற வளாகத்தில் தூய்மை செய்யும் பணியை மேற்கொண்ட மக்களவை சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் உள்ளிட்டோர் தூய்மை செய்யும் பணியில் இன்று ஈடுபட்டனர்.

Update: 2019-07-14 07:08 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் நகரங்கள், கிராமங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள தெருக்கள், சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு பகுதிகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் நோக்கில் ஸ்வச் பாரத் அபியான் அல்லது ஸ்வச் பாரத் மிஷன் என்ற பெயரிலான திட்டம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2014 முதல் 2019ம் ஆண்டு காலகட்டத்திற்குள் நாடு முழுதும் தூய்மை இந்தியா திட்டத்தினை அமல்படுத்தும் முனைப்பில் பா.ஜ.க. ஈடுபட்டது.  சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  மோடி 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று கொண்டார்.  அவரது அமைச்சரவை சகாக்களும் முறைப்படி பொறுப்பேற்று கொண்டனர்.  இதனை தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் தீவிரமுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோன்று மத்திய அரசின் ஸ்வச்தா அபியான் (தூய்மை இந்தியா) திட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜ.க. எம்.பி.க்கள் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், மனோஜ் திவாரி மற்றும் மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் உள்ளிட்டோர் தூய்மை செய்யும் பணியில் இன்று ஈடுபட்டனர்.  அவர்களுடன் கட்சியின் மற்ற பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

தூய்மைப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக கைகளில் பாதுகாப்பு உறைகளை அணிந்து கொண்டனர்.  இதன்பின், மிக நீண்ட துடைப்பங்களை கொண்டு நாடாளுமன்ற வளாக பகுதிகளில் கிடந்த காய்ந்த இலை, தழை போன்றவற்றை கூட்டி அப்புறப்படுத்தினர்.  பின்பு அவற்றை முறமொன்றால் அள்ளி அதற்கான குப்பை கூடையில் போட்டனர்.  அவர்கள் பணி செய்வதற்கு ஏதுவாக பாதுகாவலர்களும் சற்று விலகி நின்றனர்.

மேலும் செய்திகள்