சீனா, அமெரிக்காவை விட இந்தியாவில் வருமான வரிவிகிதம் குறைவு நிதியமைச்சகம் விளக்கம்

இந்தியாவில் வருமான வரிவிகிதம் குறைவு நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-07-07 19:45 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பெரும் செல்வந்தர்களுக்கு வருமான வரிவிகிதம் உயர்த்தப்பட்டு இருந்தது. அதன்படி ஆண்டு வருமானம் (வரி செலுத்தத்தக்க வருமானம்) ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை உள்ளவர்களுக்கு 35.88 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாகவும், ரூ.5 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்கு இது 42.7 சதவீதமாகவும் உயர்கிறது.

இது தொடர்பாக வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே கூறும்போது, ‘பெரும் செல்வந்தவர்கள் கூடுதல் வரி செலுத்துமாறு பணிக்கப்படுவது உலக அளவில் வழக்கமான நிகழ்வுதான். இந்தியாவில் தற்போது ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை வருமானம் கொண்டவர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 15 சதவீத கூடுதல் கட்டணம் தற்போது 25 சதவீதமாகவும், ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு 15 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாகவும் கூடுதல் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது’ என்று கூறினார். இதுவும் உலக அளவில் குறைவான வரிவிகிதம் தான் என்று கூறிய பாண்டே, ஏனெனில் தென்ஆப்பிரிக்கா, சீனாவில் தனிநபர் வருமான வரிவிகிதம் 45 சதவீதமாகவும், அமெரிக்காவில் 50.3 சதவீதமாகவும் உள்ளது என்று தெரிவித்தார். இதைப்போல இங்கிலாந்தில் (45), ஜப்பானில் (45.9), கனடாவில் (54), பிரான்சில் (66) சதவீதம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்