வெளிநாட்டு சிறைகளில் 8,189 இந்தியர்கள் தவிப்பு : மத்திய மந்திரி தகவல்
வெளிநாடுகளில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் நேற்று பதிலளித்தார்.
புதுடெல்லி,
முரளீதரன் அப்போது கூறுகையில், ‘பல்வேறு வெளிநாட்டு சிறைகளில் 8,189 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் வளைகுடா நாடுகளில் மட்டும் 4,206 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். வெளிநாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள இந்தியர்களில், அதிகபட்சமாக 1,811 பேர் சவுதி அரேபியாவிலும், அமீரகத்தில் 1,392 பேரும் உள்ளனர்’ என்று கூறினார்.
இந்தியா–அமீரகம் இடையே கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கடந்த 2013–ம் ஆண்டுமுதல் அமலுக்கு வந்திருந்தாலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமீரகம் இதுவரை எந்த கைதியையும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவில்லை என்றும் முரளீதரன் தெரிவித்தார்.
இதைப்போல மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முரளீதரன், கடந்த 2016–ம் ஆண்டு முதல் கடந்த மே மாதம் 31–ந் தேதி வரை, 125 நாடுகளில் உயிரிழந்த இந்தியர்கள் 14,312 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளதாக கூறினார்.