‘ரெயில்வே அச்சக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாது’ - கனிமொழி கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்

ரெயில்வே அச்சக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாது என கனிமொழி கேள்விக்கு, மத்திய மந்திரி பதில் அளித்தார்.;

Update: 2019-07-03 23:00 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது தூத்துக்குடி தொகுதி தி.மு.க. உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார். அதில், ரெயில்வேக்கு சொந்தமான 5 அச்சகங்கள் மூடப்படுகின்றதே அவற்றை மூட வேண்டியதற்கான தேவை என்ன? அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும்? என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல், ‘உலகமே இன்று டிஜிட்டல் மயமாகிவிட்டது. நவீன தொழில்நுட்பத்துக்கு மாறி விட்டது. அதிகமான மக்கள் ஆன்லைனிலேயே டிக்கெட் பதிவு செய்கிறார்கள். டிக்கெட்டுகள் அச்சிடப்படுவதற்கான அச்சுச்செலவு அதிகமாகிறது. எனவே அச்சகங்களை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சகங்கள் மூடப்பட்டாலும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாது. ரெயில்வேயின் பிற பிரிவுகளில் பணி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ‘தூத்துக்குடி இரட்டை ரெயில் பாதை திட்டத்தை ரூ.1,182 கோடி மதிப்பீட்டில் 2021-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை ரூ.382 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை-தூத்துக்குடி இரட்டை ரெயில் பாதை திட்டம் திட்டமிட்டபடி முடிக்கப்படுமா? என்றும் கனிமொழி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ரெயில்வேத்துறை இணை மந்திரி சுரேஷ் சென்னபசப்பாஅங்காடி, ‘திட்டத்துக்கு தேவையான நிலத்தை தமிழக அரசு இன்னும் அளிக்கவில்லை. தமிழக அரசு நிலத்தை ஒப்படைத்த பிறகு திட்டப்பணிகள் தொடங்கி விடும்’ என்று பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்