7 ஆயிரம் ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் - நாடாளுமன்றத்தில் தகவல்

2021-ம் ஆண்டுக்குள் 7 ஆயிரம் பயணிகள் ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி தெரிவித்தார்.

Update: 2019-07-03 22:45 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

பிரீமியம், மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரெயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன.

மெயின் லைன் பயணிகள் ரெயில்களில் 1,300 பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக, இன்னும் இதுபோன்ற ரெயில்களின் 7 ஆயிரத்து 20 பெட்டிகளில், 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற ரெயில் பெட்டிகளிலும் அடுத்தடுத்து கேமராக்கள் பொருத்தப்படும்.

எண்ணெய் நிறுவனங்களிடம் டீசல் வாங்கியதற்காக, ரெயில்வே ஆயிரம் ரூபாய் கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளது. டீசலுக்கான ரசீதுகள் அவ்வப்போது வரும். அதற்கு அவ்வப்போது பணம் கொடுப்போம்.

இந்திய எண்ணெய் கழகத்துக்கு ரூ.1,037 கோடியும், பாரத் பெட்ரோலியத்துக்கு ரூ.154 கோடியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ.61 கோடியும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.115 கோடியும் கொடுக்க வேண்டி உள்ளது.

ரெயில்களில் 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தனி படுக்கை முன்பதிவு செய்தால், முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முழு கட்டணத்தால், 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கடந்த மே மாதம்வரை ரூ.1,569 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்