மாநிலங்களவை இடைத்தேர்தல் : குஜராத்தில் 65 எம்.எல்.ஏ.க்களை இடம்மாற்றுகிறது காங்கிரஸ்

குஜராத் மாநிலத்தில் இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான இடைத்தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்கிறது.

Update: 2019-07-03 10:40 GMT
 குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா  தலைவர் அமித் ஷாவும், அமைச்சர் ஸ்மிருதி இரானியும் மக்களவைத் தேர்தலில் காந்தி நகர் (குஜராத்), அமேதி (உத்தபிரதேசம்) தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இருவரும் மத்திய அமைச்சராகியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர்கள். இப்போது அந்த இடங்கள் காலியாகிறது. இதற்கான இடைத்தேர்தல் 5-ம் தேதி நடக்கிறது. இப்போது குஜராத் சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின்படி பார்த்தால் இரு கட்சிகளுக்கும் ஒரு எம்.பி. கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேர்தல் தனித்தனியாக நடப்பதால் பா.ஜனதாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. 
 
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. பா.ஜனதா கட்சிக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இரு இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடப்பதாகல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 71 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஏற்கனவே இரு எம்.எல்.ஏ.க்கள் விலகியதால் கட்சிக்கு பலம் குறைந்துள்ளது. இப்போது 71 எம்.எல்.ஏ.க்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களிப்பதை தவிர்க்கவும்,  பா.ஜனதாவிடம் விலை போவதை தவிர்க்கவும் காங்கிரஸ் தங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 65 பேரை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்து செல்கிறது. சில எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொது நிகழ்ச்சிகள் உள்ளதால் காங்கிரஸ் 65 எம்.எல்.ஏ.க்களை மட்டும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அழைத்து செல்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்