பா.ஜனதாவிற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை வாரணாசியில் 6-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
பா.ஜனதாவிற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை வாரணாசியில் 6-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.;
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நடந்த முதல் பா.ஜனதா நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கட்சித் தலைவர் அமித் ஷா மற்றும் அதன் செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் பாராட்டப்பட்டனர் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமர் மோடி தனது உரையின்போது, தற்போதைய கூட்டத்தொடரின் போது கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருப்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். எம்.பி.க்கள் மக்கள் சேவைக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும், இதனால் அவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்று அறியப்படும் எனக் கூறியுள்ளார் பிரகலாத் ஜோஷி.
இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடி வரைவிற்குள்ளும் குறைந்தது ஐந்து மரங்களை நட வேண்டும் என்று பிரதமர் மோடி கட்சி தொண்டர்களிடம் கூறியுள்ளார். கட்சி எம்.பி.க்கள், யாராவது தங்கள் நடத்தை மூலம் கட்சிக்கு கெட்ட பெயரைக் கொண்டுவந்தால் அதனை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என பிரதமர் மோடி கூறியதாக கட்சிவட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியாவின் மகன் ஆகாஷ் விஜயவர்கியா அரசு அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டதை அடுத்து பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளான ஜூலை 6-ம் தேதி பிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை தொடங்கவுள்ளார். அமித்ஷா இதனை தெலுங்கானாவிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிறகட்சித் தலைவர்களும் தொடங்கி வைக்க உள்ளனர்.