பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.2,700 கோடி போதைப்பொருள் பறிமுதல் - காஷ்மீரை சேர்ந்தவர் கைது

பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.2 ஆயிரத்து 700 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு மூளையாக செயல்பட்ட காஷ்மீரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2019-06-30 21:45 GMT
அமிர்தசரஸ்,

இந்தியா-பாகிஸ்தான் இடையே அட்டாரி எல்லை உள்ளது. அதில், வர்த்தகத்துக்கு என தனிப்பாதை உள்ளது. அந்த பாதை வழியாக வரும் வணிக பொருட்களை இந்திய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி, இந்தியாவுக்குள் அனுமதிப்பார்கள்.

கடந்த சனிக்கிழமை, ஒரு சரக்கு வாகனத்தில், இந்துப்பு எனக்கூறி, 600 மூட்டைகள் வந்தன. அவற்றை அட்டாரியில் இறக்கிய பிறகு டிரைவர் சென்றுவிட்டார். பின்னர், அவற்றை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை சேர்ந்த சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

600 மூட்டைகளில், அடிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 15 மூட்டைகள் சந்தேகத்துக்குரியவையாக இருந்தன. வெள்ளை நிற பவுடராக அவை இருந்தன. அவற்றை சோதித்து பார்த்தபோது, அவை ‘ஹெராயின்’ போதைப்பொருள் என்று கண்டறியப்பட்டது.

532 கிலோ ஹெராயினும், 52 கிலோ கலப்பட போதைப்பொருளும் இருந்தன. சர்வதேச சந்தையில் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரத்து 700 கோடி ஆகும். சுங்க சட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சட்டப்படி, அந்த போதைப்பொருட்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட காஷ்மீர் மாநிலம் ஹந்துவாராவை சேர்ந்த தாரிக் அகமது என்பவரை காஷ்மீர் போலீசார் உதவியுடன் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இந்துப்புவை இறக்குமதி செய்த அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்தவரையும் விசாரணைக்காக சுங்க அதிகாரிகள் பிடித்துச் சென்றுள்ளனர். இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த தகவல்களை சுங்க ஆணையர் தீபக் குமார் குப்தா நிருபர்களிடம் தெரிவித்தார். இந்திய சுங்க வரலாற்றில், இவ்வளவு அதிகமான போதைப்பொருள் சிக்கியது இதுவே முதல்முறை என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்